அணைக்கட்டு, காட்பாடி அருகே எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 37 பேர் காயம்

அணைக்கட்டு, மார்ச் 8: அணைக்கட்டு, காட்பாடி அருகே நேற்று நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகள் முட்டியதில் 37 பேர் காயம் அடைந்தனர். அணைக்கட்டு தாலுகா பிச்சாநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நேற்று நடந்தது. இதில் வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பிச்சாநத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 157 மாடுகள் பங்கேற்றது.

தாசில்தார் ஹெலன்ராணி, மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலையில் அனைவரும் விழா உறுதிமொழி ஏற்று கொண்டனர். விழா காலை 10 மணியளவில் தொடங்கியது. கால்நடை மருத்துவர் ஹரிஸ் பரி சோதனைகளுக்கு பின் போட்டி தொடங்கியது. இதில், அதிவேகமாக ஓடி குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ₹1 லட்சமும், 2ம் இடம் பிடித்த காளைக்கு ₹75000 உட்பட மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், காளைகள் முட்டியதில் 27 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே உள்ள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேரை முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைகாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் தலைமையில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கே.வி.குப்பம்: காட்பாடி அடுத்த திருமணி கிராமத்தில் மாசி அமாவாசையொட்டி நேற்று எருதுவிடும் விழா நடந்தது. காலை 10 மணிக்கு எருதுவிடும் விழா துவங்கியது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடபட்டன. இதில் அணைக்கட்டு, ஊசூர், குடியாத்தம், ஆம்பூர், காட்பாடி, லத்தேரி உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். லத்தேரி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ குழுவினர்கள் முகாமிட்டு மாடுகள் முட்டியதில் காயமடைந்த 10 பேருக்கு சிகிச்சை அளித்தனர். அதில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழாவை தாசில்தார் சதீஷ், வருவாய் ஆய்வாளர் செந்தாமரை மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்தனர். இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: