இலவச பொருட்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து செல்போன் டவரில் ஏறி பாஜ பிரமுகர் தற்கொலை மிரட்டல் வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, மார்ச் 8: இலவச பொருட்கள், ஓட்டுக்கு பணம் ெகாடுப்பதை கண்டித்து வந்தவாசி அருகே செல்போன் டவரில் ஏறி பாஜ பிரமுகர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான 75 அடி உயர செல்போன் டவர் உள்ளது. இந்த டவர் மீது நேற்று காலை 10 மணியளவில் வந்தவாசி அடுத்த பாதூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(45) என்பவர் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.

இதையறிந்த, அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர், கீழே இறங்கி வரும்படி தெரிவித்தனர். ஆனால், அவர் இறங்க மறுத்து கையில் இருந்த கோரிக்கை அடங்கிய பேப்பரை வீசினார். அதில் அவர், தான் பாஜக ஒன்றிய இளைஞரணி செயலாளராக உள்ளேன். மாநில அரசுகள் மக்களுக்கு இலவச பொருட்களையோ, ஓட்டுக்கு பணம் வழங்குவதோ கூடாது. அவ்வாறு கொடுத்தால் நாட்டை முன்னேற்ற முடியாது. இதனை தடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் எங்கு என்ன வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு ₹350 ஊதியம் தர வேண்டும். ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். போனஸ் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளார். தகவலறிந்த கீழ்கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் ஏற்கவில்லை.

இதற்கிடையில் தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் புகழேந்தி தலைமையிலான வீரர்கள் வந்து அவரை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் 1 மணி நேரம் கழித்து அவரை கீழே இறக்கினர். பின்னர், போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: