திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது

திருவண்ணாமலை, மார்ச் 8: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சிஇஓ தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை சிஇஓ ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: பள்ளிகளின் தேவைகளை பள்ளி மேலாண்மை குழு மூலமாக பூர்த்தி செய்யவும், பள்ளிக்கு அரசு வழங்கும் நிதியை முறையாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி 8ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

இப்பயிற்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 167 குறு வளமையங்களில் நடக்கிறது. மேலும், 1994 பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு பள்ளியிலும் 6 பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 11,964 உறுப்பினர்கள் பயிற்சியில் கலந்து கொள்கிறார்கள். இதில் 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி அளித்தல், பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்குதல், தமிழ் வாசித்தல், எழுதுதலில் 100 சதவீதம் அடைவு திறன் பெறுதல், ஆங்கிலம் வாசித்தலில் உலக சாதனை முயற்சி, ஆண்- பெண் பாலின வேறுபாடுகளை களைதல், பேரிடர் மேலாண்மை, பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், 15 ஆயிரம் மாணவர்களை இந்த ஆண்டு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பில் சேர்க்க இலக்கு நிர்ணயம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: