விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

திருக்கோவிலூர், மார்ச் 8: விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு திருக்கோவிலூர் கிளை நூலகம்- ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இ-பயிர் மருத்துவ முகாம்மேலந்தல் மற்றும் காங்கியனூர் நூலகத்தில் நடத்தியது. துணை வேளாண்மை இயக்குனர் (ஓய்வு) பழனிவேல் தலைமை தாங்கினார். பன்னாரி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் ராஜா, கூட்டுப் பண்ணை மற்றும் இயற்கை விவசாய ஆலோசகர் புகழேந்தி, வாசகர் வட்டக் குழுத்தலைவர் சிங்காரஉதியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் அன்பழகன் வரவேற்றார்.  ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிரிஜா தலைமையிலான புதுச்சேரி பயிர் மருத்துவர் ஷோபனா குழுவினர் விவசாய மருத்துவ முகாமை நடத்தினர். இ-பயிர் மருத்துவ முகாமில் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பாதிப்படைந்த பயிர்கள் மற்றும் மண் மாதிரிகளை மருத்துவர்களிடம் காண்பித்து பிரச்னையையும் அதன் தீர்வுகளையும் கேட்டறிந்தனர். மேலாண்மை பரிந்துரைகளை அவர்களுடைய கைபேசிக்கு தமிழ் வழியின் குறுஞ்செய்தியாகவும் பயிர் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இ- பயிர் மருத்துவ முகாமில் தென்னை மரங்களுக்கு வேர் வழியாக நுண்ணுயிர்சத்து செலுத்துவது எப்படி என்பதை பற்றி காணொலி காட்சி மூலமும் விவசாயிகளின் நிலத்திற்கு சென்று நேரடி செயல்முறை விளக்கமும் அளித்தனர். விவசாயிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Related Stories: