அலுவலக வளாகத்தில் இருக்கும் வழக்கு தொடர்பான வாகனங்களை அகற்ற கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, மார்ச் 8: உளுந்தூர்பேட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், காவல் நிலையம், கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில் தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிகழும் விபத்து வழக்குகளில, பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள், கூழாங்கல், மணல் கடத்தல் லாரிகள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த வாகனங்கள் வழக்கு முடியும் வரையில் இந்த இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அரசு அலுவலகத்திற்கு வருபவர்கள் கடும் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், காவல்துறையின் சார்பில் காவல்நிலையம் எதிரில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் நிறுத்த கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளதால் காவல்நிலையத்திற்கு பல்வேறு வழக்குகளுக்கு வருபவர்களும் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கடி வருவர். அப்படி வரும்போது, இந்த வாகனங்களால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர், அலுவலக பணிக்காக கிராமப்புறங்களுக்கு சென்றுவிட்டு அரசு வாகனத்தில் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். ஆனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களால் தனது ஜீப் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், விரக்தி அடைந்த வட்டாட்சியர் வேல்முருகன், தனது ஜீப்பை காவல்நிலையத்தின் எதிரே நிறுத்திவிட்டு நடந்தே வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தேர்தல் நேரம் நெருங்க உள்ளதால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு லாரிகள் அதிக அளவு வர உள்ளதால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து வாகனங்களையும் அகற்றி வேறு இடத்தில் நிறுத்துவதற்கு போதிய ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: