புதுச்சேரி காங்., அலுவலகம் புதுப்பொலிவு பெற்றது

புதுச்சேரி, மார்ச் 8:  புதுச்சேரியில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று. பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை தன்னிடமே வைத்துள்ள கட்சியாக இருந்தாலும், எளிமையை கடைபிடிப்பதில் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. கட்சியின் அலுவலகம் வைசியாள் வீதியில் பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மற்ற கட்சியின் அலுவலகங்களை ஓப்பிடுகையில், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வசதி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. முக்கிய விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டம் நடத்தும் போது அடிப்படை வசதியின்மையால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக பல ஆண்டுகளாக சொந்த அலுவலகம் இல்லாமல் இருந்த, பாஜக கார்ப்பரேட் ஸ்டைலில் கட்சி அலுவலகம் கட்டியுள்ளனர். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மா. கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அடிப்படை வசதிகள் நிரம்பிய கட்சி அலுவலகம் உள்ளது.

வைசியாள் வீதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், அதனை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட முடியாது.  தொடர்ந்து பாதுகாக்கத்தான் முடியும். இதையடுத்து மோசமான நிலையில் இருந்த கட்டிடத்தை புனரமைக்க காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுத்தார். அதன்படி மேல்தளத்தில் இருந்த வாரைகள்(மரம்) அகற்றப்பட்டு, இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு, கட்டிடம் வலுவானதாக மாற்றப்பட்டுள்ளது. ஆண், பெண் என தனித்தனியாக கழிவறை வசதிகள், அனைத்து அறைகளிலும் ஏசி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேரடியாக பேசும் வகையில் வீடியோ கான்பரன்சிங் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இப்பணிகள் தற்போது  முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகம் தற்போது புதுப்பொலிவுடன்  காட்சியளிக்கிறது.

 வருகிற 13ம்தேதி கணபதி ஹோமத்துடன் கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்படுகிறது. அன்று முதல் தேர்தல் பணிகளை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள்,  தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: