நிறுத்தப்பட்ட இடுபொருட்களை பாசிக் மூலம் வழங்க வேண்டும்

புதுச்சேரி, மார்ச் 8:  புதுச்சேரி விவசாயிகள் சங்க பாகூர் தாலுகா குழு கூட்டம் பாகூரில் நடந்தது. தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் பலியான 40க்கும் மேற்பட்ட ராணுவ வீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மார்ச் 30ம் தேதி கரிக்கலாம்பாக்கத்தில் நடைபெறள்ள புதுச்சேரி விவசாயிகள் சங்க 20வது மாநில மாநாட்டிற்காக 15 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலையுடன் மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட மானிய தீவனத்தை உடனே வழங்க வேண்டும். பால் மற்றும் உறுப்பினர்களுக்கு லாபத்தில் ஈவுத்தொகை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பாண்லே மூலம் மானிய விலையில் கறவை பசு வழங்க வேண்டும். நடப்பு பருவத்திற்கு உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விவசாயிகளுக்கு இதுநாள் வரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக பாசிக் உழவரகம்  மூலம் வழங்க வேண்டும். 60 வயதடைந்த விவசாயிகளுக்கு சேம நல நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதை 10 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: