போலீஸ் அதிகாரிகளுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி பட்டறை

புதுச்சேரி, மார்ச் 8: புதுவையில் பாராளுமன்ற தேர்தலின்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி பட்டறை கோரிமேட்டில் நடைபெற்று வருகிறது. புதுவையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. வாக்காளர் திருத்தப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி எந்தவொரு  வாக்காளரும் தேர்தலில் வாக்குபதிவு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடாதபடி அவர்களின் பெயர்களை பதிவு செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளுடன் பாராளுமன்ற தேர்தல் பணிகள், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஜி யாதவ் நேற்று ஒருமணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் டிஐஜி ஈஸ்வர் சிங், சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா (சட்டம்-ஒழுங்கு), எஸ்பிக்கள் மாறன் (கிழக்கு), ஜிந்தா கோதண்டராமன் (வடக்கு), ரங்கநாதன் (மேற்கு), அப்துல் ரஹிம் (தெற்கு) மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கலந்து கொண்டனர். இதில், பாராளுமன்ற தேர்லுக்கான ஆயத்த பணிகள், ரவுடிகள் மீதான கண்காணிப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு ஐஜி யாதவ் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனிடையே நேற்று கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பான சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது காவல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து, மாநில தேர்தல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டுமின்றி ஓய்வுபெற்ற எஸ்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பயிற்சி அளித்தனர். இன்றும் தொடர்ந்து இந்த பயிற்சி பட்டறை நடக்கிறது.

Related Stories: