அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விரும்பும் காங். வேட்பாளர்

புதுச்சேரி, மார்ச் 8: மக்களவை தேர்தலுக்கான தேதி அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது.

பாஜக கூட்டணியில் என்ஆர் காங்கிரசுக்கு புதுவை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் டாக்டர் நாராயணசாமியை முன்னிறுத்த திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏவிசுப்பிரமணியன், வைத்திலிங்கம், ஜான்குமார் ஆகியோரது பெயர்கள்  உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே என்ஆர் காங்கிரசுக்கு எதிராக சரியான வேட்பாளரை களமிறக்கினால் வெற்றி வசப்படும் என காங். மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்தை சந்தித்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், வலியுறுத்தி வருகின்றனர். எனவே உத்தேச பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே சஞ்சய் தத் தலைமையில் நடந்த தேர்தல் குழு கூட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், அனைவரையும் தனித்தனியாக அழைத்து யாரை வேட்பாளராக களமிறக்கினால் நல்லது என சஞ்சய்தத் கருத்து கேட்டுள்ளார். அப்போது எம்எல்ஏக்கள் அல்லாத நிர்வாகிகள்  ஏவி சுப்பிரமணியன் பெயரை முன் மொழிந்துள்ளனர். அப்போது அவருக்கான சாதகமான அம்சங்களை தெரிவித்தனர். குறிப்பாக அவர் கோஷ்டிகளை கடந்து அனைவரும் ஆதரிக்கக்கூடிய நபராக இருக்கிறார். காரைக்காலுக்கு பிரதிநித்துவம் கொடுத்தது போல் இருக்கும், இதன்காரணமாக 5 தொகுதிகளிலிருந்து அதிகப்படியான வாக்குகளை பெற்றுவிடலாம். மீனவர் சமுதாயத்தின் வாக்குகளும் நமக்கு கிடைக்கும் என தெரிவித்தனர். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தரப்பில் நாராயணசாமி அல்லது நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்தினால், எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் முதல்வர் நாராயணசாமிக்கும், அமைச்சர் நமச்சிவாயத்தும் எம்பி வேட்பாளராக களமிறங்குவதில் துளியும் விருப்பமில்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்திடம் நேரடியாக தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதேபோல் எம்எல்ஏவாக இருப்பவர்களை தேர்வு செய்தால் தேவையில்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க நேரிடும். இதனால் தேர்தல் செலவை வீணாக சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்சி தலைமை உத்தரவிட்டால் யாரை வேட்பாளராக களமிறக்கினாலும் அவர்களது வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதிபட தெரிவித்துவிட்டனர். இதனை அகில இந்திய கட்சி தலைமை ஏற்குமா என தெரியவில்லை. எனவே அனைவரது விருப்ப தேர்வான ஏவி சுப்பிரமணியன் தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் வேட்பாளர் யார் என்பது டெல்லியில் இருந்து முறைப்படி அகில இந்திய தலைமை அறிவிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: