தொழிலதிபர்களிடம் பணம் பறிக்க ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது

புதுச்சேரி,  மார்ச் 7: பாராளுமன்ற  தேர்தலையொட்டி புதுவையில் ரவுடிகள் மீதான கண்காணிப்பை காவல்துறை  தீவிரப்படுத்தி உள்ளது. நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்  இனியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  கொஞ்சுகிளி மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பில் கண்காணிப்பில் இருந்தபோது, அங்குள்ள பனைமரத் தோப்பில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கியிருந்த 4 பேரை  மடக்கி பிடித்து விசாாித்தனர். அதில் ஒருவர் தப்பிஓடிவிட்ட நிலையில்  பிடிபட்டவர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, அவர்களை  சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கத்தி, இரும்பு பைப் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து அனைவரையும் காவல் நிலையம் கொண்டு  வழக்குபதிந்த போலீசார் அதிரடியாக விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்  மேட்டுப்பாளையம், சாணரப்பேட், புதுத் தெருவைச் சேர்ந்த சூர்யா என்ற சங்கர்  கணேஷ் (20), பள்ளித்தெரு முத்தமிழ்செல்வன் (20), காந்தி திருநல்லூர், ஓடைத்தெரு ரகு (20), ஜெயபால் (23) என்பதும், தொழிற்பேட்டை பகுதியில் இருந்து  வெளியே வரும் தொழிலதிபர்களை வழிமறித்து தாக்கி பணம் கொள்ளையடிக்க  திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து  4 பேரையும் கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், அனைவரையும் கோர்ட்டில்  ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 கத்தி,  இரும்பு பைப், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரவுடியான சூர்யா மீது இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  உள்ளது. இவர்களுடன் பதுங்கியிருந்து தப்பிச் சென்றுவிட்ட மற்றொரு ரவுடி  சுதாகரை தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த  இவர்கள் 2 ேபரும் வழக்கை நடத்த செலவுக்கு பணம் தேவைப்பட்டால் கொள்ளையடிக்க  தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதிதிட்டம் போட்டு பதுங்கியிருந்தது  விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Related Stories: