மாயமான மீன் வியாபாரி வடலூரில் மீட்பு

புதுச்சேரி, மார்ச் 7:  புதுவை தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (63). மீன் வியாபாரியான இவர் கடந்த 2ம்தேதி தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் வாங்க சென்றபோது மாயமானார். அப்பகுதியில் அவரது ரத்தக்கறை படிந்த ஆடை, இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். வழிப்பறி கும்பலின் சதிவேலையா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. ஹெலிகேமிரா மூலம் 2 நாட்களாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.  இதில் எந்த துப்பும் கிடைக்காததால், அவர் மீது பகையில் இருந்த நபர்கள் குறித்து வி.தட்டாஞ்சாவடி மற்றும் காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் விசாரணையில் இறங்கிய தனிப்படை ேபாலீசார் சில தகவல்களை திரட்டி தேடுதல் பணியை முடுக்கி விட்டனர்.  இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கணேசனின் மகளுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் தந்தை கடலூர் மாவட்டம் வடலூர் பஸ் நிறுத்தம் அருகே மயக்க நிலையில் கிடப்பதாகவும், வந்து மீட்டுச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதுபற்றி உறவினர்கள் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினர், கணேசனின் உறவினர்களுடன் அங்கு விரைந்தனர். அவர்கள் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டதும் எதிர்முனையில் பேசிய நபர் எந்த பகுதியில் வருகிறீர்கள்... இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்... என கேட்டபடி இருந்துள்ளார். ஆனால் அவர்களின் வாகனம் கடலூர் தாண்டியவுடன் எதிர்முனையில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதையடுத்து போலீஸ் அறிவுறுத்தலின்படி மீண்டும் அந்த நம்பரை கணேசனின் மகள் தொடர்பு கொள்ள முயன்றபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டது. இருப்பினும் சிறிதுநேரத்தில் அங்கு சென்ற போலீசார் மற்றும் உறவினர்கள் வடலூர் பஸ் நிலையம் மற்றும் வள்ளலார் சபை அருகே நீண்டநேரமாக தேடியும் கணேசனை காணவில்லை. செல்போனில் பேசிய நபர் தெரிவித்த இடத்திற்கு வந்தபிறகும் கணேசன் கிடைக்காததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரது உறவினர்களை மட்டும் அங்கேயே இறக்கி விட்டுவிட்டு, புதுச்சேரி திரும்புவதாக கூறி போலீசார் கிளம்பினர். அவர்கள் குறிஞ்சிப்பாடி அருகே வந்தபோது, கணேசனின் உறவினர்களிடமிருந்து போலீசுக்கு அழைப்பு வந்தது. அப்போது கணேசன் கிடைத்து விட்டதாகவும், வள்ளலார் சபை அருகே படுத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.  இதையடுத்து உடனே அங்கு திரும்பிய தனிப்படை போலீசார், கணேசனை மீட்டனர். ஆனால் அப்போது கணசேனின் உடலில் எந்த காயங்களும் இல்லை. மேலும் புதிய கைலி மட்டும் அவர் அணிந்திருந்தார். இதையடுத்து அவரை போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர். வரும் வழியிலேயே, தனக்கு மயக்கம் வருவதாகவும், கடலூர் மருத்துவமனையில் சேர்க்குமாறு போலீசாரிடம் கணேசன் கூறியுள்ளார்.  இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் பல்வேறு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனக் கூறி அவரை உடனே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை மருத்துவகுழு பரிசோதித்த நிலையில், நேற்று கணேசனுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதனிடையே கணேசன் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்து அங்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அவரிடம் நலம் விசாரித்தனர். அதேநேரத்தில் கணேசனிடம் ஏலச்சீட்டு பணம் செலுத்திய நபர்களும் அங்கு நள்ளிரவில் திரண்டிருந்தனர். அப்போது சிலர், தங்களுக்கு இதுவரை ஏலச்சீட்டு பணத்தை கொடுக்காமல் கணேசன் ஏமாற்றி வந்த விபரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இதனால் போலீசாரின் கவனம் தற்போது கணேசன் பக்கம் திரும்பியுள்ளது. 2ம்தேதி முதல் மாயமாகி இருந்த அவர், 3 நாட்களாக எங்கே இருந்தார், அவரை கடத்தியவர்கள் எத்தனை பேர், எந்த வாகனத்தில் எப்படி கடத்தி சென்றார்கள்? என்பது குறித்த கேள்விக்கு கணேசன் அளித்த பதில் காவல்துறைக்கு திருப்தி அளிக்காத நிலையில், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  ஏலச்சீட்டு பணத்தை வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்காமல் ஏமாற்றியது உள்ளிட்ட தன் மீதான சில பிரச்னைகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ளும் வகையில் கணேசனே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பேரில் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.  இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: