திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள் குளிர்பான கடைகளில் அலைமோதிய கூட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 7: திருவண்ணாமலையில் நேற்று 102 டிகிரி வெயில் சுட்டெரித்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது. அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கும் முன்பே, தமிழகம் முழுவதும் வரலாறு காணாத கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அதிகபட்சமான வெயிலும், வெப்பக்காற்றும் வீசுவதால் மக்கள் துடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்கள் வெயில் பாதிப்பில் அதிகம் சிக்கியிருக்கிறது. மேலும், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெயில் அளவு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.  தொடர்ந்து, பகல் 12 மணியில் இருந்து, மாலை 3 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மிக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. புறவழிச்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் தார் உருகும் நிலை காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலுடன், அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிபட்டனர்.

தொடர்ந்து, காலை 11 மணிக்கே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேரடி வீதி, மாட வீதி உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. குளிர்பான கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. அதேபோல், அண்ணாமலையார் கோயிலிலும் நேற்று காலை 10 மணிக்கு பிறகு பக்கர்கள் கூட்டமின்றி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் வருகை தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பது, பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. மேலும், இனி வரும் நாட்களில் கடும் வெயில் அதிகரிக்கும் என்பதால், நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக குறையும் என்று பொதுமக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

Related Stories: