ஆரணி அருகே பரபரப்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் மறியல் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல்

ஆரணி, மார்ச் 7: ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் குறித்து அலட்சியமாக பதிலளித்த ஊராட்சி செயலாளருக்கு அடிஉைதை விழுந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்காக, இதே கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக கிராமமக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யவில்லையாம். இதனால் கிராம மக்கள் ஊராட்சி செயலாளர் சிவக்குமாரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் போனில் கேட்டபோது, ‘நாங்கள் விடும்போது விடுவோம்’ என அலட்சியமாக பதிலளித்தாராம். கடந்த வாரம் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வடுகசாத்து கிராமத்திற்கு வந்தபோது கிராம மக்கள் திரண்டு அவரிடம் தட்டிக்கேட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரை தாக்கியதாக தெரிகிறது.  இதையடுத்து நேற்று காலை 150க்கும் மேற்பட்டோர் ஆரணி- தேவிகாபுரம் சாலையில் காலிக்குடங்களுடன் 7.30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்து ஊராட்சி செயலாளர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் செயலரை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் தாலுகா போலீசார் சிவக்குமாரை மீட்டனர். பின்னர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த மக்கள், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் எங்கள் பகுதிக்கு எப்போது வந்தாலும் குடிபோதையில் வருகிறார். எங்கள் பகுதிக்கு ஏன் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்று கேட்டால் சரிவர பதில் அளிப்பதில்லை.  எங்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: