சேர்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு அமைச்சர்- முன்னாள் நகராட்சி தலைவர் ஆதரவாளர் இடையே கடும் மோதல் நுகர்வோர் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைவர் தேர்தலில்

திருவண்ணாமலை, மார்ச் 7: கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவு நடத்தாமல் வெற்றி அறிவிப்பு வெளியிட்டதால், அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு சேர்களை உடைத்து வீசி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை சங்க நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்தது. அதில், 21 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, சங்க தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதையொட்டி, அதிமுகவில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து தலைவர் பதவியை கைப்பற்ற களம் இறங்கினர்.அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவாளரான ஆரணியை சேர்ந்த கஜேந்திரன் ஒரு அணியாகவும், திருவண்ணாமலை நகராட்சி முன்னாள் தலைவர் வி.பவன்குமார் ஒரு அணியாகவும் போட்டியிட திட்டமிட்டிருந்தனர்.

அதையொட்டி, தங்களுடைய ஆதரவு நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன் நேற்று தேர்தல் நடக்க இருந்த சங்க அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், சங்கத்தின் தலைவராக அமைச்சரின் ஆதரவாளரான ஜி.வி.கஜேந்திரன் மற்றும் துணைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதனின் மகன் ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக, சங்க தகவல் பலகையில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கையெழுத்துடன் ஒட்டப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த முன்னாள் நகராட்சி தலைவர் வி.பவன்குமார் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளிடம் முறையிட முயன்றனர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. மேலும், தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜி.வி.கஜேந்திரனும், முன்னாள் நகராட்சி தலைவர் பவன்குமாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பவன்குமார் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஆனால், 17 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருந்ததால், வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது என கஜேந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, வெளிப்படையாக தேர்தல் நடத்தாமல், மோசடி செய்திருப்பதாக பவன்குமார் தரப்பினர் கூச்சலிட்டனர். அப்போது, இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக வலுத்து கைகலப்பு நடந்தது. இதில் ஒரு சிலருக்கு சட்டை கிழிந்தது. மேலும், சிலர் அலுவலகத்தில் இருந்த சேர்களை உடைத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர். அதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதைப்பார்த்து உடன் இருந்தவர்கள் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர், சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: