மணல் குவாரியை மூடக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கிய 3 பேர் கைது

அரியலூர்,மார்ச் 6: திருமானூரில் மணல் குவாரியை நிறுத்த கோரி சாகும் வரை  உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் அதன் ஒன்றிய பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக தனியார் மற்றும் அரசு மணல் குவாரி இயங்கி வருவதனால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, போர்வெலை நம்பியுள்ள விவசாயமும் கேள்விக்குறி ஆகிவிட்டது. மேலும் தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட  8 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாவும் கொள்ளிடம் ஆறு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி தொடங்கி மணல் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து திருமானூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், மற்றும் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காத தமிழக அரசும், பொதுப்பணி துறையும் தொடர்ந்து திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளுக்கு புறம்பாக  மணலை அதிக ஆழத்தில் எடுத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை முற்றிலுமாக நிறுத்தக் கோரி கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில் சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில்  நேற்று (5ம் தேதி)ஈடுபட்டார். கொள்ளிடம் நீராதாரபாதுகாப்பு குழு தலைவர் தனபால் போராட்டத்தை துவக்கி  வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மாரியம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுமுகம், உள்ளிட்டோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.

இந்நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிடும் படி திருமானூர் எஸ்ஐ அன்புச்செல்வன், போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். விதிமுறைகளுக்கு புறம்பாக, மக்களின் வாழ்வாதாரமான, குடிநீரையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் இயங்கும் அரசு மணல் குவாரியை நிறுத்தும வரையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டகாரர்கள் கூறினர். இதனால்  போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் பாளை.திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் ஆகிய 3  பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: