திருமானூர் அருகே மின்விளக்கு வசதி இல்லாததால் விவசாயிகள் சாலை மறியல் முயற்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரியலூர், மார்ச் 6: திருமானூர் அருகே சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விவசாயிகள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கீழப்பழுவூர், தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் சாலை, திருப்பெயர், குந்தபுரம் சாலைகள் இணையும் இடத்தில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக திருமானூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், வெற்றியூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள், விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மெயின்ரோட்டில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு கொள்ளிடம் குடிநீர் வசதி செய்யவில்லை. மேற்கண்ட பிரச்னை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மெயின்ரோடு கள்ளூரில் சாலை மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்று கூடினர்.

இந்த தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் நாரயணன், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கலியமூர்த்தி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் ஆகியோருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சாலை பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ஒருவாரத்தில் அந்த பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.

Related Stories: