இன்று காதலர் தினம் ரோஜா வரத்து அதிகரிப்பு

திருப்பூர், பிப்.14: காதலர் தினத்தையொட்டி, திருப்பூரில் ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், பூக்களின் விலையும், இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

 ஓசூர், பெங்களூர் நகரங்களில் இருந்து வரும் ரோஜாக்கள் திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். சீசனில் குண்டு மல்லி, சன்ன மல்லி பூக்கள் 10 டன் வரை விற்பனை செய்யப்படும். குண்டு மல்லி சீசன் சித்திரை மாதம் துவங்கும் நிலையில், தற்போது மார்க்கெட்டுக்கு 2 டன் வரையே பூக்கள் வருகிறது.

 உலகம் முழுவதும் இன்று(14ம் தேதி), காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதல் ஜோடிகள், ரோஜா மலர்களை கொடுத்து, காதலை பரிமாறிக் கொள்வர். இந்நிலையில், ரோஜா பூக்களுக்கான தேவை உயர்ந்துள்ளது.

சாதாரண நாட்களில், விற்கும் விலையை விட இருமடங்கு விலையில் ரோஜா பூக்கள் விற்பனையாகி வருகின்றன. கடந்த வாரங்களில் ஒரு கட்டு ரூ.100 முதல், 120 வரை விற்பனை செய்யப்பட்ட ரோஜாக்கள், நேற்று காலை முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் ஒரு ரோஜாப் பூ ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.10 முதல், 15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதில், பைவ் ஸ்டார் ரோஸ், த்ரீ ரோஸ், பட்டு ரோஸ் உள்ளிட்ட பல வகையான ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. குண்டு மல்லி பூவின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பூக்களின் விலை அதிகம் என்றாலும், பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகி விடுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: