ேவலை நிறுத்தப்போராட்டத்தின் போது சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்

நாமக்கல், பிப்.14: நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தின் போது, சஸ்பெண்டான, 114 ஆசிரியர்கள் இன்று(14ம் தேதி) மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 114 ஆசிரியர்களை, கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் கடந்த 3 வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. தற்போது முழு ஆண்டு தேர்வு நெருங்கி வருவதால், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்ட்டான 114 ஆசிரியர்களும், இன்று (14ம் தேதி) பள்ளிக்கு செல்கிறார்கள். இதற்கான உத்தரவை இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பிக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும், ஏற்கனவே அவர்கள் பணியாற்றிவந்த பள்ளிக்கே மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர். சஸ்பெண்ட் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படவுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையில், இறுதியான ஆணைக்கு உட்பட்டவர்கள் என்ற நிபந்தனையின் பேரில், அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜாக்டோஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து, சஸ்பெண்ட் ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, பின்னர் எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: