சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் அவதி

ஊட்டி, பிப். 14: கோத்தகிரி வட்டாரத்தில் பணியாற்றும் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான சம்பள பட்டியல் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் தயார் செய்யப்பட்டு, கருவூலத்திற்கு அனுப்பப்படும். இதையடுத்து மாத இறுதியில் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் போடப்பட்டு வந்தது.

 இந்நிலையில் கோத்தகிரி வட்டாரத்தில் பணியாற்றும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தை அணுகியுள்ளனர். அப்போது சம்பள பட்டியல் தயார் செய்து கருவூலத்திற்கு அனுப்பப்படாதது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக சம்பளம் இல்லாததால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வேலைநிறுத்ததில் பங்கேற்றதற்காக பழிவாங்கும் நோக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் சில நாட்களில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும்’, என்றனர்.

Related Stories: