முதுமலையில் கடும் வறட்சி இடம் பெயரும் விலங்குகள்

ஊட்டி, பிப். 14: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பனிபொழிவு காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இடம் பெயர துவங்கியுள்ளது.

 முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முதுமலை, தெப்பக்காடு, கக்கநல்லா சோதனை சாவடி வரையிலும், நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, மாயார், மாவனல்லா, சிறியூர், சிங்காரா ஆகிய வனப்பகுதிகளில் யானை, புலிகள், கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளது. அதேபோல் ஈட்டி, தேக்கு மரம் உட்பட பல்வேறு விலை உயர்ந்த மரங்களும் இந்த வனத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி பொழிவு அதிகமாக காணப்படும். இதனால் வனப்பகுதிகளில் உள்ள சிறிய செடி, கொடிகள் காய்ந்து விடும்.

இது போன்ற சமயங்களில் காட்டு தீ ஏற்பட்டு பல ஹெக்டர் பரப்பளவிலான வனங்கள் தீயில் எரிந்த நாசமாகிவிடும்.  இம்முறை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பனி பொழிவு நீடித்ததால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு - கக்கநல்லா வரையுள்ள வனங்கள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. அதேபோல், மசினகுடி முதல் முதுமலை வரையிலும் சாலையோரங்களில் உள்ள வனங்களில் செடி, கொடிகள் காய்ந்து காட்சியளிக்கிறது. புற்கள் கூட பச்சை நிறத்தில் காணமுடிவதில்லை.  இதனால், யானை, மான்கள் உட்பட அனை த்து விலங்குகளும் உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி இடம்பெயர  துவங்கியுள்ளன. மேலும், முதுமலை வனத்தில் காட்டு தீ ஏற்படும் அபாயமும் நீடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  பொதுவாக, இதுபோன்ற வறட்சி காலங்களில் வனப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும். ஆனால், இம்முறை புலிகள் காப்பகம் மூடப்படுவது குறித்து எவ்வித தகவல்களையும் வனத்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: