மாவட்டத்தில் கடும் வறட்சி பொக்லைன் மூலம் மரவள்ளி அறுவடை

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், பொக்லைன் மூலம் மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, மொரப்பூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட வட்டாரங்களில், 15 ஆயிரம் ஏக்கரில்  மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மரவள்ளி கிழங்குகள், சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால், தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், சொட்டுநீர் பாசனத்தில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில், ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளி கிழங்குகள், தற்போது பொக்லைன் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது, குங்குமரோஸ், முல்லைவாடி, வெள்ளைக்கிழங்கு போன்ற மரவள்ளி ரகங்களை சாகுபடி செய்துள்ளோம். ஒரு செடியில் 4 முதல் 7 கிலோ வரை கிழங்கு கிடைக்கும். ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை கிடைக்கும். தற்போது வறட்சி காரணமாக ஈரப்பதம் இல்லாததால், மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ₹4.50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஒரு டன் ₹4500க்கு விற்கப்படுகிறது,’ என்றனர். தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு கூறுகையில், ‘வறட்சியினால் மரவள்ளி கிழங்கு அழியும் நிலையில் உள்ளது. பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் மரவள்ளி கிழங்குகளுக்கு, போதுமான விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மரவள்ளி கிழங்கு விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களையும், வங்கி கடன்களையும் அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கம் மூலம் மரவள்ளி அரவை ஆலை அமைத்து, மரவள்ளி கொள்முதல் செய்ய வேண்டும்,’ என்றார்.

Related Stories: