சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.20 கோடி நிதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, பிப். 14:   சொட்டு நீர் பாசன மானியத்திற்கு முதல்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையடுத்து அடுத்த கட்ட மானியம் பெற விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்காக சொட்டு நீர் பாசன வசதி அனைத்து வகையான விளை நிலங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.54 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை  2,320 விவசாயிகளுக்கு ரூ.20 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2வது கட்டத்திற்கு ரூ.34 கோடி நிதி உள்ளதால், விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  இதில் சொட்டு நீர் பாசனத்துடன், எக்டருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் ரெயின் கன், ஸ்பிரிங்ளர் ஆகியவை வழங்கும் திட்டம் உள்ளது. அத்திட்டத்தில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் சரிவு, பருவமழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் சொட்டு நீர் பாசனம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இனி வரும் காலங்களில் குறைந்த நீரை கொண்டு பயிர் சாகுபடி செய்வது தான் சிறந்த வழிமுறையாகும். எனவே சொட்டு நீர் பாசனம் என்பது மிகவும் அவசியமாகும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வசதியாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கி வருகின்றன. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: