இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னை நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

ஈரோடு, பிப். 14:   ஈரோடு மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் சேவைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

   தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் மட்டுமின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையங்கள் மூலம் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இது தவிர வாக்காளர் அடையாள அட்டை புதியதாக எடுப்பது, திருத்தம் உள்ளிட்ட பணிகள் தனியாக நடந்து வருகிறது. இ-சேவை திட்டத்தினால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால் விண்ணப்பிக்க பல மணி நேரம் சேவை மையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது குறைந்தது 10 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட்டு விடுகிறது. ஒரே இடத்தில் அனைத்து சான்றிதழ்களும் கிடைப்பதால், பொதுமக்களுக்கு அலைச்சல் இல்லை. ஆனால் சர்வர் பிரச்னையால் விண்ணப்பிக்க பல மணி நேரம் சேவை மையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதே போல விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிக்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை அனுப்பும் ரகசிய எண் வருவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.  ஈரோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தினமும் வருகின்றனர். ஆனால் சர்வர் பிரச்னையால் காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு சில நாட்களில் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பொது மக்கள் கூறினர்.

Related Stories: