பொம்மிடி அருகே போலீஸ் குவிப்பு கோஷ்டி மோதலில் வீடு சூறை இரும்பு ராடால் தாக்கியதில் 2 பேர் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.14: பொம்மிடி அருகே, இருதரப்பினர் மோதலில் வீடு அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டதோடு, இரும்பு ராடால் தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே கும்பாரஅள்ளி பகுதியில் பொங்கல் பண்டிகையின்போது, ஒலிப்பெருக்கி மூலம் பாட்டு போடுவதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், ஒரு தரப்பை சேர்ந்த மாயக்கண்ணன், சேட்டு, சந்துரு, பூபதி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு தரப்பினர் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே ஜாமீனில் வந்த மாயக்கண்ணன், சேட்டு, சந்துரு, பூபதி ஆகிய 4 பேர் நேற்று மாலை ஊருக்குள் வந்து பெண்களையும், பள்ளி மாணவிகளையும் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், பாப்பிரெட்டிப்பட்டிபொம்மிடி சாலை ஒட்டுபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பொம்மிடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்ைத நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்துசென்றனர். இந்நிலையில் நேற்று காலை, மாயக்கண்ணன் உள்ளிட்ட 4 பேரும், கும்பாரஅள்ளி பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தட்டிக் கேட்ட சின்னதுரை, செந்தில் ஆகியோரை, 4 பேரும் சேர்ந்து இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: