பிஎஸ்என்எல்., ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் துணை பொது செயலாளர் தகவல்

ஈரோடு, பிப். 14:  பிஎஸ்என்எல்., நிறுவனத்தை காத்திட பிப்.18ம் தேதி முதல் 3 நாட்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என துணை பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

  பிஎஸ்என்எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் அகில இந்திய துணை பொது செயலாளரும், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளருமான செல்லப்பா நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்என்எல்., நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் 1.75 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவில் பிஎஸ்என்எல், ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் போன்ற 4 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

 இதில் மத்திய அரசு தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல்., நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என செயல்பட்டு வருகிறது. மற்ற செல்போன் சேவைகளில் 4 ஜி அலைக்கற்றை உள்ளது. ஆனால் பிஎஸ்என்எல்., நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் வியாபாரத்தை பெருக்க முடியாத நிலை உள்ளது.

மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்க பார்க்கிறது. கார்ப்ரேட் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்க அனுமதிக்கும் மத்திய அரசு, பிஎஸ்என்எல்., கடன் வாங்க தடை விதிக்கிறது.  கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.2.91 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்துள்ளது.

இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தையும் கடந்த 3 மாதமாக வழங்காமல் உள்ளனர்.

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும். 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல்., நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 18ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: