கட்டணம் செலுத்தாததால் 58 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி நகராட்சி பகுதியில் கட்டணம் செலுத்தாத 58 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை, அதிகாரிகள் துண்டித்தனர்.தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு, சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு 3 மாதத்திற்கு ஒருமுறை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம் வசூலிக்கிறது. இந்த கட்டணத்தை சரியாக செலுத்தாததால், ₹2 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. இந்நிலையில், தர்மபுரி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள், வார்டுகளில் குடிநீர் கட்டணம் வசூலிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 1வது வார்டு, 3, 4, 6, 8, 9, 11, 16,18,19, 21, 22, 24, 28, 29 ஆகிய வார்டுகளில் குடிநீர் உள்ளிட்ட நிலுவை வரிகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த இணைப்புகளை, அதிகாரிகள் முன்னிலையில் துண்டித்தனர். மொத்தம் 15 வார்டுகளில், கட்டணம் செலுத்தாத 58 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவையிலுள்ள அனைத்து கட்டணங்களையும், உரிய காலத்தில் செலுத்த வேண்டும். தொடர்ந்து கட்டணங்களை செலுத்தாதவர்களின், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

Related Stories: