கரூர் தாந்தோணிமலை பகுதி காட்டு வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பு குடியிருப்புவாசிகள் அவதி

கரூர், பிப்.14: கரூர் தாந்தோணிமலை குடியிருப்பு பகுதியின் வழியாக செல்லும் காட்டு வாய்க்காலில்  சாயப்பட்டறை கழிவுகள் கலக்க விடப்படுவதால் இந்த பகுதி மக்கள் கடுமையாக  அவதிப்பட்டு வருகின்றனர்.செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து  ராயனூர், தாந்தோணிமலை சிவசக்தி நகர், மில்கேட் வழியாக காட்டு வாய்க்கால்  செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டு வாய்க்கால் மூலம் அதிகளவு  நிலங்கள் பாசன வசதியை பெற்று வந்தன. தற்போதைய நிலையில் தண்ணீர் வராததால்  எந்த நேரமும் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. காட்டு வாய்க்கால்  பயணிக்கும் சிவசக்தி நகர், மில்கேட் போன்ற பகுதிகளை சுற்றிலும் தற்போதைய  நிலையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இந்த பகுதியில்  உள்ள ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவுகள் வேறு இடங்களில் கடந்த பல  ஆண்டுகளாக கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ஆண்டாக,  குடியிருப்பு வளாகங்களின் வழியாக செல்லும் காட்டு வாய்க்காலில் கலக்க  விடப்படுவதாக இந்த பகுதியினர் கூறுகின்றனர். சாயப்பட்டறை கழிவுநீர்  காட்டு வாய்க்காலில் செல்வதால் இந்த பகுதியினர் குடியிருக்க முடியாமல்  அவதிப்படுகின்றனர். கொசுத்தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றாலும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதோடு நோய் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், இந்த பகுதியை சுற்றிலும் போர் போட்டாலும் தண்ணீருக்கு பதில் நுரைதான் அதிகளவு வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலை குறித்து  இப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச்  சென்றும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது விரக்தியில் உள்ளனர். இதுபற்றி போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என பகுதி மக்கள் எண்ணுகின்றனர்.  

எனவே,  பாதிக்கப்பட்டு வரும் இந்த பகுதி மக்களின் நலன் கருதி, உடனடியாக காட்டு  வாய்க்காலில் சாயக்கழிவுகள் கலக்காத வகையில் ஏற்பாடுகளை அதிகாரிகள்  விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும்  எதிர்பார்க்கின்றனர்.

கலெக்டருக்காக மக்கள் காத்திருப்புகடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாவட்ட கலெக்டராக இருந்த கோவிந்தராஜ், வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்ட சமயத்தில், சிவசக்தி நகரின் உட்புற பகுதிக்கு கலெக்டர் ஆய்வு செய்ய வருவார் என கூறப்பட்டது. இதனால், இந்த பகுதியினர் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து கலெக்டருக்காக காத்திருந்தனர். ஆனால், சாலையிலேயே ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பி விட்டார். இதனால் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதே போல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும் இந்த பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

நிரந்தர தீர்வு காண வேண்டும்

 சிவசக்தி நகரின் வழியாக செல்லும் இந்த காட்டு வாய்க்கால் குறிப்பிட்ட தூரம் வரை மேடான பகுதியாக உள்ளதால், கழிவுநீர் அனைத்தும் இந்த பகுதியிலேயே தேங்கி வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. கழிவுநீர் நீண்ட நாட்களாக தேங்கியிருப்பதால் தொற்றுநோய் உட்பட பல்வேறு தொந்தரவுகளாலும் இந்த பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, காட்டு வாய்க்காலில் மறைமுகமாக கலக்கப்பட்டு வரும் சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: