வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹2,000 ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைக்கும் ெசயல் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் குற்றச்சாட்டு

தஞ்சை, பிப். 14: வறுமை கோட்டுக்கு  கீழ் உள்ளவர்களுக்கு ₹2,000 என்ற அறிவிப்பு ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளும் செயல் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர்  முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதா சிவக்குமார் கூறினார்.தமிழ்நாடு ஆதிதிராவிடர்  முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் சதா சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வறுமை  கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ₹2,000 என்று  சட்டசபையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆளும்கட்சி தனது  வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளும் முதல் முயற்சியாகும். கஜா புயலால்  பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரண பொருட்களும், நிவாரணத்தொகையும்  இதுவரை கிடைக்கவில்லை. இந்த குழப்பமான நேரத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளிகளுக்கு ₹2,000 என்று அறிவித்திருப்பது ஆளும்கட்சியின் தேர்தல்  பயத்தை வெளிப்படையாக காட்டுகிறது.நடப்பாண்டில்  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் என்பது இதுவரை முழுமையாக  எடுக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் வறுமை கோட்டுக்கு கீழ்  உள்ளவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளவர்களில் நிறைய பேர் இறந்திருப்பர். வறுமை கோட்டுக்கு கீழ்  உள்ளவர்கள் பட்டியலை தயார் செய்ய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட  வேண்டும். இந்த தொகை பெற முழுமையான பயனாளிகள் யார் என்பதையும் வெளிப்படையாக  அறிவிக்க வேண்டும். தாலுகா வாரியாக பயனாளிகள் பட்டியலை முதலில் ஒட்ட  வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: