தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க முயற்சி துணைவேந்தர் பேச்சு

தஞ்சை, பிப். 14: தஞ்சையில் இந்தியா- ஜப்பான் நாடுகளில் வரலாற்று, தொல்லியல் மரபுவள மேலாட்சியும், பண்பாட்டு சுற்றுலாவும், பொருண்மைகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் என்ற தலைப்பில் 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் துவங்கியது.கருத்தரங்கை துவக்கி வைத்து துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகள் இடையே மொழியியல் தொடர்புகளை பெரும்பாலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு நமக்கு உணர்த்துகிறது. மதுரையில் 1981ம் ஆண்டு நடந்த 5வது உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோ வெளியிட்ட ஆய்வறிக்கையில் சங்கக்கால தமிழும், ஜப்பானிய மொழியில் மூதாதையர்கள் பயன்படுத்திய சொற்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ்ப் பல்கலைக்கழகம் கலாசார மரபுக்கான பல்கலைக்கழகம். இதில் தமிழ் பண்பாடு, மரபுக்கு முக்கியத்துவம் அளித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பண்பாட்டு அருங்காட்சியகம் உள்ளது. இதை விரிவுப்படுத்த மத்திய அரசிடம் ரூ.15 கோடி கோருவதற்கான கருத்துருக்கள் அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகால தமிழ்ப் பண்பாட்டைச் சித்தரிக்கும் வகையில் பொருட்களை வைத்து இந்த அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் ஆட்சியரகத்தின் எதிரே பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்றார்.புனே தக்காணக் கல்லூரி மதிப்புறு பேராசிரியர் பத்தையா, மத்திய தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனர் ஓட்டா, ஜப்பான் நாட்டின் கோபே யமட்டோ பல்கலைக்கழக சுற்றுலாத்துறை பேராசிரியர் மனபு கொய்கோ, தமிழ்ப் பல்கலைக்கழக சுவடிப் புலத்தலைவர் ஜெயக்குமார், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் சுப்பராயலு, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் ராஜவேலு, இணை பேராசிரியர் செல்வகுமார் பங்கேற்றனர்.

Related Stories: