பேராவூரணி அரசு கல்லூரியில் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க சிறப்பு முகாம்

சேதுபாவாசத்திரம், பிப். 14: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்து பொது இடங்களில் பொதுமக்கள், வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இளம் வாக்காளர்களாகிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ராணி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

பேராசிரியர்கள் ராஜ்மோகன், வினோத்குமார், நித்தியசேகர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: