காரைக்கால் அரசலாற்றங்கரை காடாக மாறிவரும் அவலம் நடைபாதையும் தடம் மாறியது குடிமகன்கள் அட்டகாசம் நீடிப்பு

காரைக்கால், பிப்.14:  காரைக்கால் அரசலாற்றங்கரை மேற்கு பகுதியில், காடுபோல் செடிகள் கொடிகள் மண்டிகிடக்கிறது. இதனால் நடைபாதையும் தெரியாத வகையில் செடிகள் மண்டிக்கிடப்பதால் குடிமகன் அட்டகாசம் நாளுக்கு நாள் நீடிக்கிறது.காரைக்கால் அரசலாற்றங்கரை மேற்குப்புறம் ஓடும் ஆற்றின் கரையை பலப்படுத்தவும், 2 கிலோ தூரத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு நடைபாதை அமைக்கவும், ஆற்றில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஏதுவாக புதிய படகு போக்குவரத்தை ஏற்படுத்தவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தால் திட்டம் வகுக்கப்பட்டு, பேவர் கற்களால் (அலங்கார தரை கல்) நடைபாதை மட்டும் அமைத்து, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.அதன் பிறகு, படகு போக்குவரத்து திட்டம் கைவிடப்பட்டதால், நடைபாதையை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக சமூக விரோதிகள் அருகில் உள்ள சாாரயம் மற்றும் மதுக்கடைகளில் சரக்குகளை வாங்கிச்சென்று நடைபாதையில் வைத்து அருந்துவதும், ஒரு சிலர் நடைபாதையை சேதப்படுத்தியும், மது பாட்டில்களை நடைபாதையில் உடைத்தும் செல்வதால், நடைபாதை பல இடங்களில் சேதமாகியுள்ளது.நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை கடந்த 2016ல் நமது தினகரனில் செய்தி வெளியானது. தொடர்ந்து, நடைபாதை சரி செய்யப்பட்டது. தொடந்து, அதனை பராமரிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாததால், தற்போது, நடைபாதை முழுவதும் காடுபோல் செடி, கொடிகள் வளர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத அளவுக்கு மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், அங்கு நடைபாதை என்று ஒன்று உள்ளதாகவே தெரியவில்லை. இதை இப்படியே விட்டால், தரையில் வெடிப்புகள் ற்பட்டு மீண்டும் சேதமாகும் அவலநிலை உருவாகும். எனவே அதனை உடனே சீரமைப்பதுடன், அடிக்கடி பராமரிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர் இஸ்மாயில் கூறியது: காரைக்கால் அரசலாற்றங்கரை கிழக்கு புறம் மீனவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்ததால், பலர், மேற்குபுறமுள்ள நடைபாதையில் நடைபயிர்சி மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் அலசியத்தால், தற்போது நடைபாதையில் செடிகொடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு செடிகளுக்கு இடையே பாட்டில்களை உடைத்து வீசுவதால் பலர் காயம் அடையும் நிலை உள்ளது. எனவே, நடைபாதையை உடனே சீரமத்து, போதுமான மின் விளக்குகள் அமைக்க வேண்டும். படகு சவாரியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

Related Stories: