காரைக்கால் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து முற்றுகையிட முயற்சி விசி கட்சியினர் 110 பேர் கைது

காரைக்கால், பிப்.14: காரைக்கால் அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து, நேற்று பகல் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற 110 விடுதலைச் சிறுத்தை கட்சியினரை, நகர போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அருகே, மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் குழு மாநில செயலாளர் வணங்காமுடி தலைமை வகித்தார். தொடர்ந்து, 110க்கு மேற்பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட கும்பலாக சென்றபோது, நகர போலீசார், அவர்களை மடக்கி கைது செய்தனர்.போராட்டம் குறித்து, அரசியல் குழு மாநில செயலாளர் வணங்காமுடி கூறியது: காரைக்கால் மாவட்ட அரசு பொதுமருத்துவமனை, கடந்த பல ஆண்டுகளாக செயலற்ற தன்மையில் இயங்கிவருகிறது. அவசர உதவிக்கு துளிக்கூட லாயக்கற்ற மருத்துவமனையாக உள்ளது. எந்த விபத்தென்றாலும், புதுச்சேரி, தஞ்சாவூருக்கு மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்து தப்பித்து கொள்கின்றனர். போகும் வழியில் பலரது உயிர் பிரியும் அவலநிலை உள்ளது. குறைந்தபட்சம் முதல் உதவி செய்து அனுப்பினால்கூட பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது.இப்படிபட்ட அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களிடையே நிலவும் தொழில் போட்டி காரணமாக, நோயாளிகளை சரியாக கவனிப்பது கிடையாது. இது குறித்து நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், அனைத்து நோய்களுக்குமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் நாய்களின் பெருக்கம் அதிகரித்திருப்பதால், தினம் 4 பேர் நாய்கடியால் கஸ்டப்படுகின்றனர். ஆனால், அதற்கு உரிய தடுப்பு ஊசி காரைக்கால் மருத்துவானையில் போதிய இருப்பு இல்லை. இனி வரும் காலத்தில் போதுமான ஊசிகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். மருத்துவமனை மருத்துவர்கள் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இம்முறைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். போர்க்கால முறையில் அரசு மருத்துவமனையை சீரமைக்கவேண்டும் என்றார்.

Related Stories: