முள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பரிமாற்ற திட்டம்

பொன்னமராவதி, பிப். 14: பொன்னமராவதி வட்டார வளமையத்துக்கு உட்பட்ட முள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி  பரிமாற்ற திட்டம் நடந்தது. இத்திட்டமானது  கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு நடுநிலைப்பள்ளி அல்லது  உயர்நிலைப்பள்ளியை தேர்வு செய்து அப்பள்ளியை நகர்ப்புற உயர்நிலை அல்லது  மேல்நிலைப்பள்ளியுடன் இணைப்பு செய்து கிராமப்புற பள்ளியில் 8ம் வகுப்பு  படிக்கும் 20 மாணவர்கள், நகர்ப்புற பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் 20  மாணவர்களுடன் கலந்துரையாடினர்.இணைப்பு பள்ளியில் உள்ள வசதி, கற்றல்  கற்பித்தல் நிகழ்வு மற்றும் அப்பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள்,  பல்வேறு இயற்கை சூழல்கள் வளங்கள் ஆகியவற்றை பார்த்து அனுபவித்து பிற  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி புதிய அனுபவம் பெறும்  வகையில் அமைய பெற்ற திட்டமாகும். இதன்படி அறிவியல் பாடத்தில்  வனங்களும், வனவிலங்குகளை பாதுகாத்தலும் என்ற பாடம் கற்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ, பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இத்திட்டத்தில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம்  அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர், ஆசிரியர்கள் 2 பேர் கற்றலில்  ஈடுபட்டனர். இப்பயிற்சியானது 6 நாட்கள் முள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியிலும், 6 நாட்கள் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அரசு  உயர்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம்  உடனிருந்தார். பயிற்சி ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பெரியதம்பி  மற்றும் பலர் செய்திருந்தனர்.

Related Stories: