ஆலங்குடி அருகே நெடுவாசலில் கஜா புயலால் பாதித்த விவசாயிகள், மாணவர்களுக்கு 4,300 தென்னங்கன்று

ஆலங்குடி, பிப். 14: ஆலங்குடி அருகே நெடுவாசலில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு 4,300 தென்னங்கன்று வழங்கப்பட்டன.இந்திய அரசின் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்று, மா, பலா, கொய்யா, தேக்கு கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான வெங்கடேசன் தலைமையில் அருள் முத்தையா, வெங்கடேசன், திருமுருகன், சுந்தரவடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத்திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு 4,300 தென்னங்கன்று, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. லைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் ராமசாமி, நூலகர் வெங்கட்ரமணி ஆகியோர் பேசினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். இதேபோல் விஞ்ஞானிகள் குழு சார்பில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த துறையூர், வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்று, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான வெங்கடேசன் கூறுகையில், எங்கள் விஞ்ஞானிகள் சார்பில் பசுமை பூமி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் ஏற்பாட்டில் புயல் பாதித்த பகுதிகளில் 10 கிராமங்களில் 3,000 குடும்பங்களுக்கு 7,800 தென்னங்கன்று, 3,200 பலவகை மரக்கன்றுகள் கடந்தாண்டு டிசம்பர் 1 முதல் இதுவரை 5 முறை வழங்கப்பட்டு 100 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.

Related Stories: