புதுக்கோட்டையில் நாளை புத்தக திருவிழா துவக்கம் புத்தக விழிப்புணர்வு பேரணி திரளானோர் பங்கேற்பு

புதுக்கோட்டை, பிப்.14: புதுக்கோட்டை 3-ஆவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நாளை  தொடங்குகிறது. இதனையொட்டி நேற்று புதுக்கோட்டையில் புத்தகப் பேரணி நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை 3-வது புத்தகத்திருவிழாநாளை(பிப்.15) முதல் 24ம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தும் வகையில் வரவேற்புக்குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் நேற்று  புத்தகங்கள் குறித்த பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். பேரணியை நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மருத்துவர்கள் ராமதாஸ், சலீம், கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  புத்தகங்களையும், புத்தகங்கள் குறித்த பதாகைகளையும் ஏந்தியவாறு நடைபெற்ற பேரணியில் வரவேற்புக்குழுச் செயலாளர்  மணவாளன் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள்  முத்துநிலவன்,  தனபதி, வழக்கறிஞர் செந்தில்  உள்ளிட்ட புத்தக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேரணி பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி, வடக்குராஜ வீதி வழியாக நகர்மன்ற வளாகத்தை வந்தடைந்தது, பேரணி வடக்குராஜ வீதி வந்த போது புதுக்கோட்டை உயர்தொடக்கப்பள்ளி மாணவர்கள் புத்தகங்களை ஏந்தி வரவேற்பு அளித்தனர்.

Related Stories: