கறம்பக்குடியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் தீயணைப்பு நிலையம் இடிந்து விழும் அபாயம் திக்...திக்...வீரர்கள் விடிவு காலம் பிறப்பது எப்போது?

கறம்பகுடி, பிப். 14: கறம்பக்குடியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருவதால் இடிந்து விழும்அச்சத்தில் வீரர்கள் உள்ளனர். எனவே புதிய கட்டிடத்துக்கு விரைவில் விடிவு காலம் பிறப்பது எப்போது என்று வீரர்கள் எதிர்பார்த்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியானது பல ஆண்டுகளுக்கு முன் ஆலங்குடி தாலுகாவோடு இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கறம்பக்குடி பகுதி 39 ஊராட்சிகளை உள்ளடக்கி காணப்படுகிறது. இதில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி அனைத்து ஊராட்சிகளும் அமைந்துள்ளன. கறம்பக்குடி பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக வியாபார நிறுவனங்கள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் கறம்பக்குடியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை காணப்பட்டு நெருக்கம் மிகுந்த பகுதியாக உள்ளது. கறம்பக்குடி பகுதி மக்கள் பல ஆண்டுகளாகவே வருவாய்த்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை பெறவும், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆலங்குடி தாலுகாவுக்கே சென்று வந்தனர்.மக்களின் நீண்டநாள் கோரிக்கையை முந்தைய திமுக அரசில் (2009ம் ஆண்டு) அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் கறம்பக்குடி தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டு கறம்பக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தாலுகாவானது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேலும் கறம்பக்குடி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கறம்பக்குடி தாலுகா நிலைய அலுவலகம், பேரூராட்சி கட்டிடத்தில் துவங்குவதற்கு முன்பே தீயணைப்பு நிலையமானது 2005ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி துவங்கப்பட்டது.

மாதம்தோறும் வாடகை ரூ.6,000 ரொக்கமாக இன்று வரை கொடுத்து வருகின்றனர். தீயணைப்பு நிலையம் துவங்கிய காலத்தில் இருந்து தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் முந்தைய, தற்போதைய அதிமுக அரசானது பொதுமக்களின் வேண்டுகோளை நிராகரித்தும், கண்டு கொள்ளாமலும் இன்று வரை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2005ம் ஆண்டில் இருந்தே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு அரசு புதிய கட்டிடம் அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் கட்டிடம் உள்ளது. மேலும் பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருவதால் அங்கு பணிபுரியும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள் ஓய்வெடுக்க தங்குவதற்கு இதுவரை அறைகள், அலுவலர் குடியிருப்புகள் அமைக்கவில்லை. பல ஆண்டுகளாகவே சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரக்கூடிய தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையிலும் வெயிலிலும் வாகனங்கள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு அரசால் வழங்கப்பட்ட தீயணைப்பு வாகன வண்டிகள் நிறுத்துவதற்கு இன்று வரை ஒரு கொட்டகை கூட அமைக்கவில்லை. மேலும் பல ஆண்டுகளாகவே மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பழுதடையும் சூழ்நிலை உள்ளது. தீயணைப்பு நிலையம் அலுவலகம் எதிரே வாகனம் நிறுத்தும் இடத்தில் நிழல் கொடுத்து கொண்டிருந்த புங்கைமரமும் புயலுக்கு பின் முறிந்து கீழே விழுந்ததால் தற்போது வெட்டவெளியில் தீயணைப்பு வாகனம் 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: