அரசு ரப்பர் கழகம் கிளவியாறு சரகத்தில் தீ 600 மரங்கள் சேதம்

குலசேகரம், பிப். 14:  கோதையாறு அருகே அரசு ரப்பர் கழக காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 600 ரப்பர் மரங்கள் கருகின.குமரி மாவட்டத்தில் இலையுதிர் காலம் நிலவும் நிலையில் மரங்கள் அனைத்தும் இலைகளை உதிர்த்து வருகின்றன. இதனால் வனங்களிலும், ரப்பர் காடுகளில் இலைச் சருகுகள்  நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மழையின்றி கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காடுகளிலுள்ள  செடி, கொடி மற்றும் புதர்கள் அனைத்தும் காய்ந்து கரிந்த நிலையில் உள்ளன. வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும், சருகுகளையும், புதர்களையும் அகற்றும் வகையில் சிலர் தீ ஏற்படுத்துவதாலும் காடுகளில் தீ  பரவுகின்றன.இந்நிலையில் அரசு ரப்பர் கழகம் கோதையாறு கோட்டம் கல்லாறு பிரிவு, கிளவியாறு சரக ரப்பர் காட்டில் நேற்று முன்தினம் திடீரென்று தீ ஏற்பட்டு ரப்பர் காட்டுக்குள் வேகமாக பரவியது. இதையடுத்து தொழிலாளர்கள் ரப்பர் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் காட்டுக்குள் தீ அணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாததால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் சுமார் 600 மரங்கள் வரை தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு அந்தப் பகுதி வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளில் உலர்ந்த ரப்பர் மரத்தின் கிளை சாய்ந்து கிடந்ததும், அதன் மூலம் மின்சாரம் கசித்து தீ ஏற்பட்டதும் காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்கப் பொதுச்செயலர் எம். வல்சகுமார், ரப்பர் கழக நிர்வாக இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், ரப்பர் காடுகளில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரப்பர் கழகம் செய்யாததால் தீ ஏற்பட்டு ரப்பர் மரங்கள் கருகுகின்றன என்றும், இதனைத் தடுக்க பயர் லைன் எனப்படும் தீ தடுப்புக் கோடுகளை ரப்பர் காடுகளில் வெட்ட வேண்டுமென்றும், தேவையான  தீ தடுப்பு காவலர்களை நியமித்து தீ ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: