கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் வேண்டும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை, பிப். 14:  தென்னை பயிரை பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.சட்டப்பேரவையில் நேற்று  கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் ரூ.53 கோடி தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் மூலமாக தென்னை நார் கழிவுகள் மதிப்பு கூட்டப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தென்னை, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார பயிராக இருக்கிறது.நிலமற்ற ஏழை பெண்கள் மறைமுகமாக தென்னை பயிரை நம்பியுள்ளனர். அவர்கள் தென்னை ஓலையை பின்னி விற்பது, ஈர்க்குகளை விற்றும் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது தென்னை பயிரை பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வாடல் நோய் என்னும் கொடிய நோய் பரவி, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் விளையும் தேங்காய் களின் தரம் கெட்டுவிடுமோ என்ற பயம் உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் இருந்தாலும், கன்னியாகுமரி மாவட்ட சீதோஷ்ண நிலை மற்ற மாவட்டங்களில் இருந்து வேறுபட்டது. சீதோஷ்ண நிலைக்கேற்ப தென்னையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்கினால் மட்டுமே தென்னை மரங்களையும், தென்னை விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.புதிய ஆராய்ச்சிகள் மூலம் தென்னை பயிரிடப்படும் பரப்பை அதிகரிக்க செய்ய வாய்ப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், உற்பத்தியை இரு மடங்காக பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 39 ஆராய்ச்சி நிலையங்களில், அப்பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கென ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி தேவை என்று கேட்டிருக்கிறார். தேவை இருக்கிறதா என்பதை அறிந்து, அதன் மூலம் பக்கத்து மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயி களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுமானால் அதுபற்றி பரிசீலிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: