பிளாஸ்டிக் தடை சட்டத்தால் ஒன்றரை லட்சம் வியாபாரிகள் பாதிப்பு

புதுச்சேரி, பிப். 14:   பிளாஸ்டிக் தடை சட்டத்தால் ஒன்றரை லட்சம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  புதுவையில் பிளாஸ்டிக் தடை மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே இதே தடை சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அங்கு ஏற்கனவே வணிகமும், வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலும் அதேபோன்ற பிளாஸ்டிக் தடை சட்டத்தை அமல்படுத்தினால் இங்குள்ள சிறு, குறு வியாபாரிகளும், ஓட்டல் நடத்துபவர்களும், உணவுபொருள் தயாரிப்பவர்களும் பெரும் தொழில் இழப்புக்கு ஆளாவார்கள். மேலும், இச்சட்டம் முழுமையாக உள்ளூரில் உள்ள வணிகர்களை முடக்குவதற்கு நிகராக உள்ளது. அதேநேரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இத்தடைச்சட்டம் சாதகமாக இருக்கிறது. எனவே பிளாஸ்டிக் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஒரு குழு அமைத்து என்னென்ன பொருட்களை தடை செய்யலாம் என ஆராய்ந்து நெறிப்படுத்திய பின் கொண்டு வரலாம்.

மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க 2022 வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்தால் அதனை நாங்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாம். அதுவரை புதுச்சேரியில் இச்சட்டம் அவசியம் இல்லை. பிளாஸ்டிக் தடை சட்டத்தால் ஒன்றரை லட்சம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். வரும் 21ம் தேதி ஏஎப்டி மில் திடலில் இருந்து சட்டமன்றத்தை நோக்கி அமைதிப்பேரணி நடத்த உள்ளோம். இதில் 15 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும், நாங்களே பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம், என்றார்.   பொதுச்செயலாளர் பாலு, ெபாருளாளர் தங்கமணி ஆகியோர்

உடனிருந்தனர்.

Related Stories: