வில்லியனூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

வில்லியனூர், பிப். 14:  வில்லியனூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வில்லியனூர் அடுத்த கோர்க்காடு பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இப்பகுதி மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு தரப்பினருக்கு 15 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. பின்னர், மற்றொரு தரப்பினருக்கு வேலை அளிக்கப்பட்டது. அவர்கள் 3 நாட்கள் அந்த பகுதியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிலர் மதுகுடித்து விட்டு வந்து, வேலை செய்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உடனே வேலையை நிறுத்தி விட்டனர்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வில்லியனூர் - விழுப்புரம் சாலையில் கோர்க்காடு மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும், இல்லாவிட்டால் பாதி ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தகவலறிந்த மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் வேலை வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: