ெஹல்மெட் கெடுபிடியை குறைத்த போலீஸ்

புதுச்சேரி, பிப். 14: புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் அதன் மீதான கெடுபிடியை போலீசார் குறைத்து வருகின்றனர். புதுவையில் பிப். 11ம்தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை டிஜிபி சுந்தரி நந்தா அமல்படுத்தினார். இதை கவர்னர் கிரண்பேடியும் உறுதிப்படுத்தி வருகிறார். ஆனால் மாநிலத்தை ஆளுங்கின்ற காங்கிரஸ் அரசானது மக்களுக்கு முழுமையாக இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக புதுவையில் முக்கிய சிக்னல்களில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்தவர்களின் வண்டி நம்பர்களை குறிப்பெடுத்தனர். மொத்தம் 18 ஆயிரம் பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் அபராத நோட்டீஸ் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் போராட்டம் வலுத்து வருகின்றன. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளன. நேற்று முன்தின சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களின் போராட்டம் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். மேலும் அதில், சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மத்திய மோட்டார் வாகன சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகும். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த முதல்வர் தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் கவர்னர் கிரண்பேடி நேற்றுமுன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போக்குவரத்து விதிகளை காப்பாற்ற வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளதாக சுட்டிக் காட்டிய கவர்னர், அனைத்து தகவல்களையும் கணினியில் பதவியேற்றம் செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்றும் 3வது நாளாக ெஹல்மெட் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்களிடம் இச்சட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் உயர் அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் மட்டுமே ஹெல்மெட் அணிந்து பயணிக்கின்றனர். மேலும் ஏற்கனவே ஹெல்மெட் வாங்கி வைத்திருந்தவர்கள் மட்டுமே அதை பயன்படுத்தி வருகின்றனர்.

 புதிதாக யாரும் ஹெல்மெட்டை வாங்கி பயன்படுத்த விரும்பாததால் தற்போதும் 95 சதவீதத்திற்கு மேல் சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்வதையே பார்க்க முடிகிறது. இதனால் பைக் நம்பர்களை ஆங்காங்கே குறிப்பெடுக்கும் கெடுபிடியையும் போலீசார் படிப்படியாக குறைத்து வருகின்றனர். புதுச்சேரி மக்கள் ஒத்துழைக்காத எந்தவொரு திட்டத்தையும் திட்டமிட்டு புகுத்தினால் அது தோல்வியில் முடியும் என அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: