தென்காசி மத்தளம்பாறையில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்துகள்

தென்காசி, பிப். 14: தென்காசி அடுத்த மத்தளம்பாறை நெடுஞ்சாலை பகுதி, போக்குவரத்து மிகுந்த இடமாகும். குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் பொட்டல்புதூர் தர்ஹா உள்ளிட்டவற்றிற்கு இந்த வழியாகவே செல்கின்றனர். மேலும் தென்காசி, அம்பை வழியாக கன்னியாகுமரிக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.  இச்சாலையின் முக்கியத்துவம் கருதியே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தென்காசி முதல் வள்ளியூர் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும் தென்காசிக்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அதிக  மக்கள் வசிக்கும் ஊராட்சியாகவும் மத்தளம்பாறை திகழ்கிறது. சாலையின் இருபுறமும் சம அளவில் வீடுகளும், கடைகளும்  இருப்பதால் மக்கள் நடமாட்டமும் மிகுந்து காணப்படும்.  தற்போது மத்தளம்பாறை நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையின் அகலம் குறைந்து காணப்படுவதுடன், இருபுறமும் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கவனிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதனால் அடிக்கடி கோர விபத்துகளும், அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

 சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தலை சிதறி உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு குடும்பமே பலியானதும் குறிப்பிடத்தக்கது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. குறிப்பிட்ட சாலை, மாநில நெடுஞ்சாலையாக இருப்பதால் நெடுஞ்சாலை துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் தெரிவிக்கின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் இதனை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை, கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, இனியாவது விபத்து மற்றும் உயிர் பலிகளை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் தனிக்கவனம் செலுத்தி துரிதநடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: