தென்காசி குருநாத வைத்தியசாலை சிக்னல் பகுதியில் பழுதடைந்துள்ள சாலை கழிவு நீரோடையால் விபத்து அபாயம்

தென்காசி, பிப்.14:  தென்காசி நகர் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி ஆகும். குறிப்பாக தென்காசியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து அதிகளவில் தென்காசி பஜாருக்கு பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வருகின்றனர். தென்காசி சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி, அம்மன் சன்னதி 2வது தெருக்களின் மையப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குபவர்களும், செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆய்க்குடி, அகரக்கட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் நெல்லை மெயின் ரோட்டிற்கு செல்வதற்கு இந்த குருநாத வைத்தியசாலை சந்திப்பை பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த சாலை 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது சாலை பழுதடைந்துள்ளதுடன் கழிவுநீரோடை தடுப்புச்சுவரும் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்கில் குழந்தைகளுடன் வந்த மூன்று பேர் குழியில் விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். மேலும் கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு சிலர் பழுதை கவனிக்காமல் வந்துவிட்டு பின்னர் குறுகலான அந்த சாலையில் திரும்பிச் செல்லமுடியாத நிலையும் உள்ளது. இதனால் போக்குவரத்தும் தடை படுகிறது. கனரக வாகனங்களூம் வந்து செல்வதால் பழுதான சாலையால் வீடுகள் மீது சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியில் உள்ளவர்கள் இரவு நிம்மதியாக உறங்கமுடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலையை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியையும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் வேறு பகுதிக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

அடிக்கடி சிலர் இந்த குழியில் விழுந்துவிடுவதும் பணியிலிருக்கும் போக்குவரத்து காவலர் அல்லது அந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்களும் தூக்கிவிடுவதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள்தான் குழியில் யாரும் விழுந்துவிடாதவாறு  சில கற்களை போட்டு நிரப்பி ஒரு சிவப்பு கொடியையும் நட்டு வைத்துள்ளனர். வழக்கமாக அவ்வழியாக வாகனத்தில் சென்ற நகராட்சி ஆணையாளரும் அப்பகுதியினர் முற்றுகையிட்டு புகார் தெரிவித்ததிலிருந்து அந்த பக்கமாக வருவதையே தவிர்த்துவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இப்பகுதியில் உள்ள குழியின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை சீரமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர். தற்போது தென்காசி எம்எல்ஏவின் முயற்சியால் நகராட்சியின் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 6 கோடி ரூபாய் நிதி பெற்றுத் தந்துள்ள நிலையில் இந்த அத்தியாவசிய பணியையும் அந்த நிதியில் மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Related Stories: