காவல் நிலையம் இடிந்து விழும் அபாயம்

விழுப்புரம், பிப். 14: விழுப்புரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இருப்புபாதை காவல்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கேட்டு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் இன்ஸ்பெக்டர் மனு அளித்துள்ளார்.தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்வது ரயில்வே இருப்புபாதை போலீசாரின் முக்கிய பணியாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில் நிலையமாக திகழ்வது விழுப்புரம் ரயில் நிலையம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிகழும் அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும், அது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்யும் பணியில், ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம், தற்போது முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள், நிலைய எழுத்தர் அறைகள், ஆயுத அறைகள், கணினி அறைகள் அமைந்துள்ளது.

இந்த அறைகள் அனைத்தும் பழுதடைந்து, மேற்புற ஓடுகள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் அனைத்து அறைகளிலும் தண்ணீர் உள்ளே புகுந்து ரயில்வே போலீஸ்ஸ்டேஷன் குளம் போல் காட்சியளிக்கும் நிலை உருவாகிறது.

இதனால் அங்குள்ள குற்ற பதிவு ஆவணங்கள், மழைநீரில் சேதமடையும் சூழல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகள் ஒரு புறம் இருந்தாலும், 8 பெண் போலீசார் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இடிந்துவிழும் நிலையில் உள்ள இந்த ரயில்வே இருப்புபாதை காவல்நிலையத்தில் பாத்ரூம், காவலர்கள் ஓய்வறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இது தொடர்பாக விழுப்புரம் ரயில்வே இருப்புபாதை காவல்நிலைய இன்ஸ்பெக்டர், தங்கள் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பல ஆண்டுகளாக புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் ரயில்வே இருப்புபாதை காவல்நிலையத்தில் போலீசார் அச்சத்துடன் பணியாற்றும் நிலை உள்ளது. இதனிடையே கடந்த இருநாட்களுக்கு முன் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் இன்ஸ்பெக்டர் கேத்ரின்சுஜாதா ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள இந்த காவல்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரியும், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: