முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் செயல்படாத சுத்திகரிப்பு நிலையங்களால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

முத்துப்பேட்டை, பிப்.14: முத்துப்பேட்டை பேரூராட்சி தெற்குகாடு, செம்படவன் காடு மருதங்கா வெளியில்  செயல்படாத சுத்திகரிப்பு நிலையங்களால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குகாடு, செம்படவன்காடு, மருதங்காவெளி ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர்தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில்  தெற்குகாடு, செம்படவன்காடு,  மருதங்காவெளி ஆகிய 3பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2013-14ம் ஆண்டில் பயனுக்கு வந்தது. வறட்சி நிவாரண திட்டநிதியில் தலா  ரூ.6 லட்சம் வீதம் மூன்றுக்கும் மொத்தம் ரூ 18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு அப்போதைக்கு பயனுக்கு வந்த மூன்று கட்டடத்திலும் பிளாஸ்டிக் டேங்க், பில்டர் மற்றும் மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அருகேயே போர்வெல்லும் அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி சுத்திகரித்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தனித்தனி பம்ப் ஆபரேட்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள்  இந்த பணியில் ஆர்வம் இல்லாததால் இந்த மூன்று குடிநீர்சுத்திகரிப்பு நிலையமும் பணியாளர்களின் அலட்சியத்தால் பயன்பாட்டில் இல்லாமல் தற்போது  வீணாகி வருகிறது. இந்நிலையில் தரமற்று கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்திலிருந்த படிக்கட்டுகள் உள்வாங்கின. தாங்குபில்லர்களும் பயனற்று உள்வாங்கின. மின்மோட்டார்களும் அடிக்கடி பழுதடைந்தது.இதனால் பயனுக்கு வந்த சில வாரங்களிலேயே சுத்திகரிப்பு நிலையங்கள் மூன்றும் அடுத்தடுத்து மூடப்பட்டு விட்டன. மேலும் இதில் உள்ள பொருட்களும் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால் இவைகள் திருட்டு போகவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் ரூ. 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பயனுக்கு வந்த கட்டடத்திலிருந்து குடிநீர்பெற வழியின்றி இப்பகுதியினர் தவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது இப்பகுதியில் செல்லும் ஆறுகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. மழையும் பெய்யதாதால் கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் இப்பகுதியில் குடிநீர்தட்டுப்பாடும் பெரியளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் முத்துப்பேட்டையில் குடிநீர்தட்டுப்பாட்டுக்கு வரும் முன்குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: