டெல்டா பகுதியில் பணம் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை கொள்முதல் நெல்லுக்கு பல கோடி ரூபாய் நிலுவை

வலங்கைமான்,பிப்.14:  வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா  பகுதிகளில் கடந்த 1ம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்களில்   விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு  பல கோடி ரூபாய் நிலுவை உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல்  சம்பா மற்றும் தாளடி அறுவடைபணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்யும் விதமாக தமிழக அரசு தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கான பட்டியல் தொகையை அந்தந்த விவசாயிகளின் வங்கி  கணக்கில் ஏற்றும் விதமாக சேமிப்பு  கணக்கு என் பெறப்படுகிறது. இருப்பினும் விவசாயிகளின் வங்கி கணக்கில்  கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பணம் இதுவரை வரவு வைக்கப்படவில்லை.இது குறித்து வலங்கைமான் அடுத்த லாயம் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னையன் கூறுகையில். நான் கடந்த 2ம் தேதி ஆதிச்சமங்கலம் பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 200 மூட்டை நெல் விற்பனை செய்தேன். அப்போது எனது சேமிப்பு கணக்கு புத்தக நகலையும் கொடுத்துள்ளேன். 10 நாட்களை கடந்த நிலையில் இதுவரை நெல்லிற்கான பணம் எனது வங்கி கணக்கில்   வரவு வைக்க வில்லை. முன்னதாக அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவைக்கு கடனாக பெற்று பணம் கொடுத்த நிலையில் நெல்லிற்கான பணம் வராததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றேன் என்றார்.

ஆதிச்சமங்கலம் பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயி வைரவேல் கூறுகையில்:ஆதிச்சமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில்  என்னிடம்  கொள்முதல் செய்த நெல்லிற்கு கடந்த பத்து நாட்களுக்கு மேலாக எனது வங்கி கணக்கில் பணம்  வரவு வைக்க வில்லை.. இது குறித்து நேரடி கொள்முதல் நிலைய கொள்முதல் அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நீங்கள் எந்தபகுதியை சேர்ந்தவர் மற்றும் விற்பனை செய்யப்பட்ட மூட்டைகள் விபரம் தேதி ஆகியவைகளை கேட்டுக்கொண்டு நெல்லிற்கான பணம் தொடர்பாக வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். கடந்த 1ம் தேதிமுதல் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு விவசாயிகளின்  வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்த அதிகாரியே விவசாயிகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கோடு வங்கியை தொடர்பு கொள்ளுங்கள் என கூறுவது விவசாயிகளை அலைக்கழிக்கும் செயலாகும். எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்  என்றார்.

ஆதிச்சமங்கலம் அண்ணாதுரை கூறுகையில்,

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை சரியான எடை, உரிய நேரத்தில் பணம்  மற்றும் இடைதரகர்கள் இன்றி நெல்லை விற்பதற்கே  அரசின் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நாடுகின்றனர். ஆனால் தற்போது தனியார் கொள்முதல் நிலையங்களை போல் அரசின் கொள்முதல் நிலையங்களில் பணத்திற்காக விவசாயிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக உரிய விளைச்சல் இல்லாத நிலையில் தற்போது நல்ல விளைச்சல் உள்ள நிலையில் அரசு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு அதற்கான பணம் தராமல் காலம் கடத்துவது வேதனை அளிக்கிறது என்றார்.அரசின் காலதாமதத்தால் விவசாயிகளுக்கு  பல கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. எனவே அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லிற்கான பட்டியல் தொகையை கொள்முதல் செய்த ஓரிரு நாட்களிலேயே  விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க முன் வரவேண்டும் என  அனைத்து தரப்பு விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: