சேத்தியாத்தோப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மின்கம்பம்

சேத்தியாத்தோப்பு, பிப். 14: சேத்தியாத்தோப்பு கட்டுகரை ரோடு பகுதியில் உள்ள தெருவில் இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். கட்டுக்கரை தெருவிற்கு செல்லும் சாலையின் முகப்பிலிருந்து தொடர்ச்சியாக மூன்று மின் கம்பங்கள் உள்ளது. இந்த மின்கம்பங்கள் பிரதான சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான், பெரிய குப்பம், வீரமுடையான் நத்தம், பெரிய நெற்குணம், பி.ஆதனூர், அகர ஆலம்பாடி, முகந்தெரியான்குப்பம், பெரியகோட்டிமுளை, ஒட்டிமேடு, பெருந்துறை உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே விருத்தாசலம் செல்லும் அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.

மேலும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்கள் மற்றும் கார்கள், எண்ணிலடங்கா இரு சக்கர வாகனங்களும் சென்று வரும் பிரதான சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையின் அகலம் குறைவாக உள்ளதால் பேருந்துகள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் விபத்துக்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையின் வழியாகத்தான் பத்திர பதிவு அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி ஆகிய அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த பிரதான சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: