கடலூர் நகராட்சியில் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி ஒத்திவைப்பு

கடலூர், பிப். 14:  கடலூர் நகராட்சியில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணி வியாபாரிகள் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கடலூர் நகராட்சி பகுதியில் பக்தவச்சலம் மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதியில் உள்ள மார்க்கெட் சார்ந்த கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை நகராட்சி தரப்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 ஆண்டுகள் தொடர்ந்து கடை வாடகை உயர்த்தப்படாத நிலையில் தமிழக அரசு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு வாடகையை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் நகர பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பன்மடங்கு உயர்த்தி சம்பந்தப்பட்ட கடை தரப்பினருக்கு நோட்டீசு வழங்கியது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட வாடகை கட்டணம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருந்ததால் வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை வசூல் செய்யும் நடவடிக்கையில் நகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி வருகிற 21ம் தேதி வரை கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாடகை பாக்கி கடைக்காரர்களிடமிருந்து வசூல் செய்யும் பொருட்டு நகராட்சி தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் முதுநகர் பகுதியில் உயர்த்தப்பட்ட வாடகை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர்த்தப்பட்ட வாடகை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று இரண்டாவது நாளாக திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை நகராட்சி தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி தரப்பிடம் கேட்டபோது உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை வசூல் செய்யும் நடவடிக்கையில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 ஒன்பது ஆண்டுகளாக வாடகை கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மார்க்கெட் நிலவரப்படி வாடகை கட்டணம் தற்போது வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக சமரச தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் இதில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததையடுத்து இரு தரப்பினர் பாதுகாப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதுவரையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்றனர்.

Related Stories: