வழக்கறிஞர்கள் சாலை மறியல்

திருவள்ளூர், பிப் 14: வழக்கறிஞர்களை தாக்கியவர்களை கைது செய்யாததை கண்டித்து வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவள்ளூரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(43). வழக்கறிஞர். இவர், நேற்று முன்தினம் தனது நண்பர் சங்கர் என்பவருடன் பைக்கில் திருவள்ளூரில் இருந்து மணவாளநகர் நோக்கி சென்றார்.ராஜாஜி சாலையில் சென்றபோது, போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் சாலையில் நின்று பைக்கிற்கு வழிவிடாமல் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம், பைக்கிற்கு வழிவிடுமாறு குணசேகரன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 8 பேர், குணசேகரன் மற்றும் அவரது நண்பரை தாக்கியதோடு, பைக்கையும் சேதப்படுத்தி உள்ளனர். இதில், படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன்போலீசார் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமல் இருந்தனர். இதை கண்டித்து நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அரை மணி நேரம் திருவள்ளூர் - திருத்தணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Related Stories: