உள்ளாட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்வுக்கு நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் மெத்தனம் : வீதியில் போராடும் மக்கள்

திருவள்ளூர், பிப். 14: உள்ளாட்சிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க நிதி ஒதுக்குவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதால் காலிகுடங்களுடன் வீதியில் மக்கள் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊர்களில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.பொது விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் போர்வெல் வறண்டதாலும், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்ததாலும், மக்களுக்கு போதிய தண்ணீர் வழங்குவதில் சிக்கல் அதிகரித்து வருகிறது.உள்ளாட்சி பதவிகள் காலியாக இருப்பதால் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பி.டி.ஓ., தலைமையில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை கவனித்து வருகின்றனர்ஒவ்வொரு ஊராட்சியிலும் நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள், அவர்களது பகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 6 மாதங்களாக எவ்வித புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படாமல், உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது.தற்போது வறட்சியால் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இதை தீர்த்து வைக்க அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் களம் இறக்கி உள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் எந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து ஊராட்சி செயலாளர்கள் பி.டி.ஓ.,க்கு தகவல் கொடுக்கின்றனர்.பிரச்னை தலை தூக்கும்போதே தகவல் தெரிந்தும், இதற்கு தீர்வு காணும் முயற்சியில் கடை மட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களால் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. இதற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எடுக்க வேண்டிய ஆக்கபூர்வ பணிகளுக்கு போதிய நிதியை உடனடியாக பெறமுடியாமல் போவதே காரணம்.

வழக்கமான தருணங்களில் உள்ள நடைமுறையே இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. முறைப்படி கடிதம் அனுப்பி, அதற்கான திட்டமதிப்பீடு தயார்செய்து, அதனை மாவட்ட உயர் அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு சென்று நிதியை பெறுவதற்கு பல நாட்கள் ஆகிவிடுகிறது. அதுவரை பொறுத்திருந்து பயனில்லை என்று பொதுமக்கள் வீதிக்கு போராட வந்து விடுகின்றனர். இவ்வாறு மக்கள் போராட்டம் நடத்தும் பட்சத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு மெமோ கொடுப்பது அல்லது பணியிடை நீக்கம் செய்வது என்ற நடவடிக்கையில்  அதிகாரிகள் இறங்குகின்றனர். கடைநிலை ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். உரிய நேரத்தில் பிரச்னையை சுட்டிக்காட்டியும், நிதி ஒதுக்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தங்களை நசுக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று குமுறுகின்றனர். இதனால் மக்களின் கோபத்திற்கு நேரடியாக ஆளாவதோடு, அதிகாரிகளின் கோபத்திற்கும் ஆளாக நேரிடுவதாக புலம்புகின்றனர்.அரசு நிதி முறைகேடாக பயன்பட்டுவிட கூடாது என்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதாக இருந்தாலும், தற்போதுள்ள சூழல் கருதி குடிநீர் பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு உடனடியாக நிதியை வழங்க உத்தரவிடுவதன் மூலம் பிரச்னைக்கு, ஆரம்பத்திலேயே தீர்வு தரமுடியும்.

Related Stories: